pharma: மருத்துவர்களுக்கு இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!… மருந்து நிறுவனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!
pharma: மருத்துவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள், வெளிநாட்டு பயண டிக்கெட் பரிசுகள் போன்றவற்றை வழங்கக்கூடாது என மருந்து நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவுறுதப்பட்டுள்ளது.
உலகில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஏராளமாக இருந்தாலும், மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட சில மருந்துகளை பரிந்துரைப்பது வழக்கம். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து அவர்களை தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பதாக புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது டோலோ 650 மாத்திரைதான் அதிகமான மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையாகும்.
இப்படி மருத்துவர்கள் தங்கள் தயாரிப்பு மருந்துகளை பரிந்துரைக்க, அவர்களுக்கு ரூ.1,000 கோடி வரை இந்த மாத்திரையை உற்பத்தி செய்த மருந்து நிறுவனங்கள் பரிசு பொருட்களை கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது.
மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவ சாதன நிறுவனங்களிடமிருந்து எந்த வித பரிசு பொருட்களையும், டிராவல் டிக்கெட்களையும், பார்ட்டி அழைப்புகளையும் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளது. இது ஒரு லஞ்சம் பெறும் செயல்பாடு என்றும் எனவே இதனை மருத்துவர் மட்டுமல்ல மருத்துவர் சார்ந்துள்ள குடும்பத்தினர் எவரும் இதனை ஏற்கக்கூடாது என்று தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள மருந்து சந்தைப்படுத்தல் (UCPMP-2024) விதிமுறைகளின் படி, மருந்து தயாரிப்பு, சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்காக மாநாடுகளை வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யக்கூடாது. எந்தவொரு மருத்துவப் பணியாளர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட நலனுக்காக பரிசுகளை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், ஹோட்டலில் தங்குவது, விலையுயர்ந்த உணவு வகைகள், மருத்துவ நிபுணர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரிசார்ட் தங்குமிடம் போன்ற விருந்தோம்பலை வழங்கக்கூடாது. மருத்துவ மாநாடுகளின் பேச்சாளருக்கு மட்டும் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் வழங்கும் நினைவுப் பரிசுகளின் மதிப்பானது ரூ.1,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
ஏதேனும் ஒரு மருந்து தயாரிப்பு அல்லது விற்பனை சந்தைப் படுத்தல் நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட இந்த நெறிமுறை, வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால் அபராதம், சங்கத்திலிருந்து இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள், நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் என்ற பெயரில் மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பரிசுகள் மற்றும் இலவச மருந்து மாதிரிகள் வழங்குவது, அதன் மூலம் அவர்களை தங்கள் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பது போன்றவற்றிற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து, அந்த செலவை ஈடுகட்ட மருந்துகளின் விலையை அதிகமாக வைப்பது போன்றவற்றை தவிர்க்க இந்த நெறிமுகள் வழங்கப்பட்டுள்ளன.
Readmore: இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து!… அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுக்க திட்டம்!