உங்க உணவு பழக்கத்தை இப்படி மாத்திப் பாருங்க, இனி மருத்துவமனை பக்கம் கூட போக மாட்டீங்க..
உணவு முறை சீராக இல்லாததால், மனிதனின் வாழ்வில் புது புது நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பாரம்பரியமான உணவுகளை மறந்து விட்டோம். மேலும், நாம் நாட்டு மருந்துகளை விட்டுவிட்டு கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு மற்றொரு நோயை நாமே வளர்க்கிறோம். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது பலருக்கு கனவாக மாறி விட்டது. ஆனால் அது அவ்வளவு கடினமான ஒன்று அல்ல. ஆரோக்கியமாக் வாழ நம் அன்றாட வாழ்வில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் போதும். இது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் பிரபல யூட்யூப் சேனலில், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் பேசும் போது, '' அடிக்கடி கரிசலாங்கண்ணி கசாயம், ஆவாரை கசாயம் போன்ற கசாயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆவாரை கசாயம், ரத்த சர்க்கரை இருப்பவர்கள் தினமும் அருந்தும் மாமருந்து என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் சித்தா, டெல்லியில் உள்ள சித்த வைத்திய ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது. மேலும், வாரம் ஒரு நாள் இட்லி, தோசை சாப்பிட்டால் போதும். மற்ற நாட்களில், சுண்டல், முளைகட்டிய பயிறு, காய்கறிகளை அரைத்த சூப், இரண்டு முட்டை, கொஞ்சம் பாதாம் பருப்பு, கொஞ்சம் நிலக்கடலை ஆகியவை சாப்பிட வேண்டும்.
இப்படி காலையில் 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு, 11 மணிக்கு பசித்தால், சிவப்புக் கொய்யா, ஆப்பிள், பப்பாளித்துண்டு, மாதுளை போன்ற பழங்களில் ஏதாவது ஒன்று சாப்பிடலாம். இடையில் டீ குடிப்பதை நிறுத்தி விட்டு, ஒரு கப் மோர் குடிக்கலாம். மதிய உணவில், குறைவான சாதமும், காய்கறி அதிகமாகவும் இருக்க வேண்டும். சோறும் மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயானம் அரிசி, கருங்குறுவை அரிசி, கருப்புக்கவனி போன்ற அரிசியில் சமைக்கலாம். ஒடிசா கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில், கவுனி அரிசியில் ஆந்தோ சயனின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆந்தோ சயனின், புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாகவும் இருக்கிறது. மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள லைகோபின், ஆண்களின் வயது முதிர்வின் போது வரும் புராஸ்டெட் புற்றுநோயை வராமல் தடுக்க பயன்படுகிறது'' என சித்த மருத்துவர் கு. சிவராமன் கூறியுள்ளார்.
Read more: மாரடைப்பு ஏற்படாமல், நீண்ட ஆயுசுடன் வாழ ஆசையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..