உங்கள் கிச்சன் எப்போதும் சுத்தமா இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களையெல்லாம் பண்ணுங்க!!
ஒரு வீட்டின் மையமே கிச்சன்தான். அதை வைத்தே வீட்டை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
சமையலறை தினந்தோறும் பயன்படுத்தும் இடம் என்பதால், அதனை சுத்தமாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியமான விஷயம். எனவே, வீடுகளில் கிச்சனை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாஸ்து படியும், கட்டிட நிபுணர்களின் அறிவுறுத்தல் படியும், சமயலறை காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் புகை வெளியேற எளிதாக இருக்கும். சமையல் மேடை பொதுவாக கிரானைட் கல், கடப்பா கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது சில நேரங்களில் மரங்களால் செய்யப்பட்டிருக்கும். இவை அனைத்துமே கடுமையான இரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டவை. இவற்றின் மீது இரசாயனங்களைப் பயன்படுத்தும் போது, கறை, விரிசல், நிறமாற்றம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக மைல்டு சோப்பு தண்ணீரை பயன்படுத்தலாம். சமையலறையில் குழாயில் வரும் நீரில் உப்பு கலந்திருந்தால் அது பாத்திரங்கள் உள்ளிட்டவை மீது உப்பு திட்டுகளாய் படிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். இது போன்ற உப்பு திட்டுகளை உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அது குழாய் மற்றும் பாத்திரங்களை நாளடைவில் அரித்து விடும். அதனால் இந்த வெண்திட்டுக்களை அவ்வப்போது வினிகர் கொண்டு துடைக்க வேண்டும். இது சமையலறையை பளிச் என்று வைத்திருக்க உதவும்.
மேலும் நவீன சமையலறை பலவற்றிலும் டிஷ் வாஷர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பின்னர், பலரும் வீட்டு வேலையை சுலபமாக்க டிஷ்வாஷர் வாங்க தொடங்கி விட்டனர். நவீன சாதனத்தை முறையாக பராமரிப்பது அவசியம். அதில் பாத்திரங்களை ஓவர் லோட் செய்யதாலோ, அதற்குரிய கிளீனிங் லிக்விட் தேவையான அளவு ஊற்றவில்லை என்றாலும் பாத்திரங்களை சரிவர க்ளீன் செய்யமுடியாது.
அதேபோல பாத்திரங்களை அதற்குரிய இடங்களில் மட்டுமே வைக்கவேண்டும். குறிப்பாக உடையக்கூடிய பீங்கான் மற்றும் கண்ணாடி பாத்திரங்களை தனியாகவும், குக்கர் போன்ற கனமான பாத்திரங்களை தனியாகவும் அடுக்கி வைக்க வேண்டும். சமையலறையில் உள்ள டிஷ்வாஷரையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் மிக்ஸி, ஓவன் போன்றவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் மிக்ஸி பயன்படுத்தும்போது ஏதேனும் சிந்தி விட்டால், உடனடியாக துடைத்து விட வேண்டும். இல்லையென்றால் அவை மிக்ஸியில் உள்ளே இருக்கும் மோட்டார்-ஐ பாழாக்கிவிடும். அதேநேரத்தில் மிக்ஸியினை ஈரத்துடன் கையாண்டால் ஷாக் அடிக்கும் அபாயமும் உண்டு. கிரைண்டர் பயன்படுத்திய பிறகு உடனே சுத்தம் செய்ய வேண்டும். அதே போல் ஓவனை வாரத்தில் ஒரு முறை டீப்-க்ளீன் செய்வதும் அவசியம். ஓவனின் உட்புறத்தை ஈரமின்றி வைத்திருக்கவேண்டும். கிச்சன் அலமாரிகளில் பருப்பு, மசாலாக்கள், பொடிகள் போன்றவற்றை டப்பாவில் போட்டு வைப்பதுதான் இந்தியர்களின் வழக்கம். அந்த டப்பாக்களை சீராக அடுக்கி வைக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டிற்கும் அதுதான் எளிது. ஒவ்வொரு பொருள் தீர்ந்த பிறகு மீண்டும் பாத்திரங்களை சுத்தம் செய்து பிறகு அதில் கொட்டி வைக்க வேண்டும். டப்பாக்களை அழகாக வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.இதேபோல, கிச்சனை தூசி இன்றியும், தினசரி குப்பைகளை அகற்றியும் சுத்தமாக வைத்திருந்தால் உங்கள் கிச்சன் எப்போதும் பளபளனு சுத்தமாக அழகாக காட்சியளிக்கும். வீட்டிற்கு வருவோர் வியந்து பார்க்கும் அளவிற்கு மாறிவிடும்.
Read More: 45 மணி நேர தியானத்தில் பிரதமர்..! அவசர அரசு வேலைகளை கையாள்வது யார்..?