குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? பெண்களே இத கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 26.10.2006 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வு காணப்படும். பெண்களுக்கு கணவனாலோ, கணவனுடைய உறவினர்களினாலோ ஏற்படுகிற கொடுமைகளை, அச்சுறுத்தல்களை மற்றும் தாக்குதல்களை எடுத்துக்கூறி பாதுகாப்பு அலுவலர் (Protection Officer) மூலமாக நீதித்துறை நடுவர் அவர்களிடம் முறையிட்டு நீதி வாங்கி தருவதே இதன் நோக்கம்.
எங்கு சென்று புகார் அளிக்கலாம்? முதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் அப்பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அதன் பிறகு, அங்கிருந்து அந்தந்த மாவட்டத்தில் இயங்கும் சமூக நலத்துறை பிரிவில் இயங்கும் குடும்ப வன்முறை பாதுகாப்பு தடைச் சட்டம் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் அதன் பெயரில் புகார் எடுத்து தீர்வு காண்பார்கள்.
சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் : பிரிவு 17ன் கீழ் வசிக்கும் உரிமையை உறுதி செய்கிறது, பொருளாதார வன்முறையை அங்கீகரிப்பதன் மூலம் பொருளாதார நிவாரணத்தை உறுதி செய்கிறது. வாய்மொழி மற்றும் உணர்ச்சி வன்முறையை அங்கீகரிக்கிறது. குழந்தையின் தற்காலிக பொறுப்பை வழங்குகிறது.வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் தீர்ப்புகள் வாங்கி தரப்படும், பெண் இதற்காக பல வழக்குகள் போட தேவையில்லை. ஒரே வழக்கில் பல தீர்ப்புகள் பெண்களுக்கு வாங்கி தரப்படும்.
சட்டமூலம் கிடைக்கும் பாதுகாப்பு ஆணைகள்: பிரிவு 18-ன் கீழ் குடும்ப வன்முறையைத் தடுக்கும் பாதுகாப்பு ஆணைகளை பெறலாம். பிரிவு 19-ன் கீழ் கணவர் வீட்டில் குடியிருக்கும் ஆணை பெறலாம். பிரிவு 20-ன் கீழ் மனுதாரருக்கும், மனுதாரரின் குழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகளை பெறலாம். பிரிவு 21-ன் கீழ் குழந்தைகளை தாயின் தற்காலிக பொறுப்பில் வைத்திருக்க ஆணை பெறலாம். பிரிவு 22-ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு ஆணைகள் பெறலாம்.
குடும்ப வன்முறை நடக்காமல் எப்படி தடுப்பது? குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் நிச்சயமாக அனுசரித்து செல்ல வேண்டும், கணவர் வீட்டு குடும்பத்தை நம் குடும்பமாக மனைவி பார்க்க வேண்டும், மனைவி வீட்டு குடும்பத்தை நம் வீடாக கணவன் பார்க்க வேண்டும் இதுபோன்ற சிறு சிறு திருத்தங்கள் நடந்தாலே போதும் என ஷீலா கூறினார்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தை நாடலாம். தொடர்புக்கு, முத்தமிழ் ஷீலா, பாதுகாப்பு அலுவலர், தொலைபேசி : 04146 222288, அலைபேசி : 94449 30680, மாவட்ட சமூக நல அலுவலகம், விழுப்புரம் மாவட்டம்.
Read more ; வீட்டுமனை முறைகேடு வழக்கு.. அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக உத்தரவு..!!