கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!
உலகின் உயரமான மலை, பசுமையான மலைத்தொடர்கள், தார் பாலைவனம், செழுமையாக ஓடும் நதிகள், மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடு என்று பல சிறந்த புவியியல் அமைப்புகளை இந்தியா பெற்றுள்ளது. நதிக்கு மேலே மிதக்கும் தீவுகள், இயற்கையாகவே வேர்களால் ஆன பாரம், பளிங்கு போன்ற நதி என்று பிரபலமான இடங்கள் இங்கு உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவின் மிக தாழ்வான பகுதியாக விளங்கும் ஒரு இடத்தைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கேரளா மாநிலத்தில் உள்ள குட்டநாடு தான் இந்தியாவின் தாழ்வான பகுதி. பொதுவாக நிலத்தின் உயரத்தை கடல் மட்டத்தில் இருந்து இத்தனை அடி உயரத்தில் உள்ளது என்று சொல்வோம். ஆனால் குட்ட நாடு கடல் மட்டத்திற்கு கீழே 2.2 மீ தாழ்ந்து அமைந்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் குட்டநாடு. இங்கு நெல் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், கேரளாவின் அரிசி கிண்ணம் (Rice Bowl Of Kerala) என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் கடல் மட்டத்திற்கு கீழே விவசாயம் செய்யும் இடங்களில் குட்டநாடு உள்ளது என்ற உண்மை பலருக்கு தெரிந்திருக்காது.
இங்கு வரும் ஒவ்வொரு பார்வையாளரும் கிராமப்புற காட்சிகள் மற்றும் நெல் வயல்களை பார்த்து அதன் எழில் காட்சியில் மயங்கி விடுகின்றனர். படகுகள் வழியாக ஆலப்புழா காயல் வழியாக பயணிக்கும்போது, அசையும் தென்னை மரங்களின் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்க்க வைக்கும். குட்டநாடு விவசாயிகள் உப்பு நீர் நிறைந்த நிலத்தில் செய்யப்படும் பயோசலைன் விவசாயத்திற்கு பெயர்பெற்றவர்கள். 2013ஆம் ஆண்டில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்த விவசாய முறையை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய அமைப்பாக (GIAHS) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் பம்பா, மீனச்சில், அச்சன்கோவில் மற்றும் மணிமாலா ஆகிய நான்கு முக்கிய ஆறுகள் உள்ளன. வல்லம்காலி என்று அழைக்கப்படும் புன்னமடை உப்பங்கழியில் உள்ள புகழ்பெற்ற படகுப் போட்டிக்காகவும் இந்த இடம் குறிப்பிடத்தக்கது. இங்கு அறுவடை நேரத்தில் பயணிப்பது சிறந்த நேரம் ஆகும். பசுமையான வயல்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டே அறுவடை செய்யும் காட்சி உங்களை சிலிர்ப்படைய செய்யும். மேலும், பாரம்பரிய கேரளா மக்களின் வாழ்க்கை முறைகளை இங்கு பார்க்க முடியும்.
Read More : உங்க பழைய மொபைல் போனை விற்க போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!! ஏமாந்துறாதீங்க..!!