பிரதமர் மோடி பேச்சின் உண்மை என்னன்னு தெரியுமா...? முதல்வர் ஸ்டாலின் பதிவுக்கு அண்ணாமலை பதில்...!
மதம், மொழி, ஜாதி ஆகியவற்றின் பெயரால் பிளவுபடுத்துவது திமுகவிற்கு கைவந்த கலை என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
பொய்யான செய்தியை பரப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, மதம், மொழி, ஜாதி ஆகியவற்றின் பெயரால் பிளவுபடுத்துவது திமுகவிற்கு கைவந்த கலை, அதை நாங்கள் ஒதுக்கி வைப்பதில் உறுதியாக உள்ளோம்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலத்துக்கு வெளியேயும் நடக்கும் சம்பவங்கள் தெரிவதில்லை, ஒடிசாவில் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி பேசியதன் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், பொய்யான விஷயங்களைப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.