ஒரு லிட்டர் ஆவின் பால் எவ்வளவு தெரியுமா..? சென்னை மக்கள் கடும் அவதி..!! அமைச்சர் எச்சரிக்கை..!!
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இன்று வரை தண்ணீர் வடியவில்லை. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பால் உள்ளிட்ட பொருட்களுக்கு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனை காரணமாக வைத்து கடைக்காரர்கள் பலரும், ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.100, ரூ.120 என கடுமையாக விலையை உயர்த்தி விற்பனை செய்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பால் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில், கூடுதல் விலைக்கு யாரேனும் பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில், ஆவின் பால் & தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.