ஆடாதொடை மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா..? தேனில் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?
வைரஸ் நோய்களுக்கு சிறப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் ஆடாதொடை மூலிகை செடியின் மருத்துவ பயன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கிராமப்புறங்களில், ஆங்காங்கே ஆடாதொடை செடிகள் வளர்ந்திருக்கும். இந்த செடிகள், மாவிலை, நுணாவிலை போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். ஸ்பைக் வகை மஞ்சரி. வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இத்தகைய மூலிகை செடியை, தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் `மலேரியா’ சுரத்துக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது . குருதியில் இருக்கும் அசுத்தங்களை தூய்மை செய்து, சரும நோய்களைப் போக்கும் தன்மையும் ஆடாதொடைக்கு உண்டு. கொசுக்களை விரட்டுவதற்காகத் தயாரிக்கப்படும் மூலிகைக் கலவைகளில் ஆடாதொடை இலைகளையும் சேர்த்து புகைப்பிடித்தால் கொசுக்கள் இறந்துவிடும்.
இதேபோல், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல், உடல் முழுவதும் சிவந்த நிறமுள்ள புள்ளிகள் தோன்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். டெங்கு சுரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை இந்த ஆடாதொடையின் இலைகளுக்கு இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொண்டுவந்தால், சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல் போன்ற நோய்கள் அனைத்தும் குணமாகும். ஆடாதொடை இலைச் சாற்றில் சில சொட்டுகள் தேன் கலந்து ருசியான மருந்தாகவும் பருகலாம்.
ஆடாதொடை இலைகளில் உள்ள கசப்புத் தன்மை நுண்கிருமிகளை அழித்து குடற்புழுக்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மூல நோயில் வடியும் ரத்தம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது உண்டாகும் அதிக ரத்தப்போக்கைத் தடுப்பதற்கு ஆடாதொடை இலைகளை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து சாப்பிடலாம். அதிக குருதிப்பெருக்கைத் தடுக்கும் திறன் ஆடாதொடைக்கு உண்டு.
இலையைக் காயவைத்து சுருட்டி நெருப்பிட்டு, அதிலிருந்து வரும் புகையை இழுக்க கெட்டிப்பட்ட சளி இளகி வெளியேறும். உடலில் உண்டாகும் தசைப்பிடிப்பை நீக்கும் தன்மை கொண்டது ஆடாதொடை. இதன் இலைகளை விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி தசைப்பிடிப்பிருக்கும் இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். வீக்கத்தைக் கரைக்கும் திறன் இருப்பதால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களைக் கரைக்க அவ்விடத்தில் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி பற்று போடலாம்.
Read More : வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!