சாப்பிடும் போது செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? உங்களுக்குத்தான் மருத்துவர்களின் எச்சரிக்கை.!
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அனைத்துமே அவசரமாகிவிட்டது. நிம்மதியாக சாப்பிட கூட முடியாமல் அனைவரும் வேலை, பணம் என்று கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வருகின்றனர். இன்று பெரும்பாலானவர்கள் சாப்பிடும் போது செல்போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது தங்களது மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஒரு விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பழக்கத்தால் உடலுக்கு பல்வேறு விதமான தீமைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
செல்போன்களை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் நம் உடலுக்கு தீர்க்க முடியாத சில நோய்கள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவை சாப்பிடும் போது அளவரிந்து சாப்பிட வேண்டும். இதனை மீறும் போது செரிமான பிரச்சனை முதல் மலச்சிக்கல் வரை பல்வேறு குடல் சார்ந்த நோய்கள் ஏற்படும். நமது உணவு தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதனை விட குறைவாக சாப்பிடுவதும் அதிகமாக சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவர் செல்போனை பார்த்து கொண்டே சாப்பிடுவதால் அவர் சாப்பிடும் உணவின் அளவு தெரியாது. இதனால் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிட நேரிடும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கின்றனர். மேலும் ஒருவர் உணவை சாப்பிடும் போது அவரது முழு கவனமும் உணவில் இருக்க வேண்டும். உணவு சாப்பிடும் போது ஏற்படும் கவனச்சிதறல் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் நாம் உணவு சாப்பிடும் போது நமது கவனம் சாப்பாட்டில் இருந்தால்தான் மூளை அதனை செரிமானம் செய்வதற்கான கட்டளைகளை கொடுக்கும். அவ்வாறில்லாமல் நாம் செல்போன்களை பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது நமது கவனம் முழுவதும் செல்போன் திரையில் தான் இருக்கும். இது செரிமான கோளாறு ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சாப்பிடும் போது முழு கவனமும் சாப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.