ஆரஞ்சு அலர்ட்...! இன்று முதல் 20-ம் தேதி வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம்...!
மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த காலகட்டத்தில் மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மே 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் "ஆரஞ்சு அலர்ட்" முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார். சுற்றுலா வருபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இருக்க வேண்டும்.
முடிந்தால் இந்தக் காலக்கட்டத்தில் சுற்றுலா பயணம் செய்வதைத் தவிர்க்கலாம் என வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரிகளுடன் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். மீட்பு பணியில் ஈடுபட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.
சுமார் 3,500 பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் மண் அள்ளும் கருவிகள் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 450 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.