For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்...!

06:36 AM Dec 01, 2023 IST | 1newsnationuser2
டி என் பி எஸ் சி தலைவர்  செயலர்  உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க  வேண்டும்
Advertisement

முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகளையும், பணியாளர்களையும் தேர்ந்தெடுத்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தலைவர், செயலாளர் மற்றும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டிய அமைப்பை அரசு முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிக முக்கியமான அரசியலமைப்பு சட்ட நிறுவனம் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் 315-ஆவது பிரிவின்படி உருவாக்கப்பட்டது. ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 315 முதல் 320 வரையிலான பிரிவுகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் கடமைகள் செவ்வனே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அப்பணிகள் எதையுமே செய்ய முடியாமல் பணியாளர் தேர்வாணையம் முடங்கிக் கிடக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் எந்த அளவுக்கு முடங்கிக் கிடக்கின்றன என்பதற்கு சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுத்துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க 2022-ஆம் ஆண்டில் 37 அறிவிக்கைகள், 2019-ஆம் ஆண்டில் 34 அறிவிக்கைகள், 2018-ஆம் ஆண்டில் 39 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், 2023-ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அளவுக்கு முடங்கிக் கிடப்பது தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அரசு நிர்வாகமும் முடங்கிவிடக் கூடும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியானவர்களை முறைப்படி நியமிக்க வேண்டும். ஆணையத்திற்கு புதிய செயலாளரையும் உடனே நியமித்து தேர்வாணையம் முழு அளவில் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement