திமுக பிரம்மாண்ட வெற்றி..!! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி..!! பாமக நிலவரம் என்ன..?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் ஒரு சுற்றாக 2 மேஜைகளில் எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 798 வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 494 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 217 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 45 வாக்குகளும் பெற்றனர்.
ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல ஆயிரம் வாக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,26,689 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த முதல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளார் கந்தசாமி 2921 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா ஆஸ்மி ,8616 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 8362 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த தேர்தலிலும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,479 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். இரண்டாது இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.