"திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு"..!! ”நாங்க போராட அனுமதியில்லையா”..? பாயிண்டை பிடித்த அண்ணாமலை..!!
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும், இன்றைய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு அனுமதி இல்லை, ஆனால், திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி கிடையாது. ஆனால், ஆளுநரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.