Fact Check: "பாஜக தலைவரை திமுகவினர் தாக்கும் வீடியோ உண்மைக்கு புறம்பானது"… ஃபேக்ட் செக்கில் வெளியான உண்மை.!!
Fact Check: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் உறுப்பினரை திமுகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்து பார்த்ததில் 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட உட் கட்சி மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது திமுகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பியது அம்பலமாகி இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவிற்காக தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை சேர்ந்த ராஜேஷ் பிஜு என்பவரை திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக X சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நபர் " பாஜக ஐடி பிரிவின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜு திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் X தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
இது தொடர்பாக 1newsnation செய்தி நிறுவனம் நடத்திய ஃபேக்ட் செக்(Fact Check0 சோதனையில் இந்த சம்பவம் தொடர்பான உண்மை தன்மை வெளியாகி இருக்கிறது. அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் பிஜு தனது கட்சியை சார்ந்தவர்களால் சொந்த காரணங்களுக்காக தாக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
முக்கிய வார்த்தைகளின் மூலம் நடத்தப்பட்ட தேடுதலில் ஆகஸ்ட் 1 2023 இடிவி பாரத் தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில் உண்மைத் தன்மை வெளிப்பட்டு உள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட செய்தியின் படி பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா என்பவர் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்தப் புகைப்படங்களை பாஜக ஐடி பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜூ இணையதளங்களில் கசிய விட்டதாக கூறி தனது ஆதரவாளர்களுடன் சென்ற சுப்பையா ராஜேஷ் பிஜூவை தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராஜேஷ் பிஜு தனது கட்சியைச் சேர்ந்த சுப்பையா மீது பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
ராஜேஷ் பிஜூ அளித்த புகாரின் பேரில் சுப்பையா அவரது மருமகன் முத்தரசன் மற்றும் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது திமுகவினர் பாஜகவினரை தாக்கியதாக கூறப்பட்டு இணையதளங்களில் வைரல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இது 1newsnation நடத்திய ஃபேக்ட் செக் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை தமிழ்நாடு காவல்துறையும் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள சென்னை காவல்துறை " திமுகவினர் பாஜக ஐடி பிரிவு மாவட்டச் செயலாளரை தாக்கியதாக கூறப்படும் வீடியோ உண்மைக்கு புறம்பானது.31.07.2023 அன்று நங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலை தற்போது நடந்தது போன்று சித்தரித்து பரப்புகிறார்கள்.
அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்த வீடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.