Annamalai | "திமுகவினரால் தமிழ்நாட்டின் முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது"… அண்ணாமலை அதிரடி பதிவு.!
Annamalai: திராவிட முன்னேற்றக் கழகத்தால்(DMK) தமிழ்நாட்டின் முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற செய்வதற்காக அந்தக் கட்சியின் தேசிய தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேபி நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பறவைகள் சரணாலயத்திற்கு வருவது போல தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் தமிழகம் வந்து செல்வதாக விமர்சித்து இருந்தார். முதல்வரின் இந்த விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை தமிழகத்தில் 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுகவினரால் இந்தியாவை மட்டுமல்ல தமிழகத்தில் ஒரு முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் ஸ்டாலினின் மகனும் மருமகனும் 30,000 கோடி ஊழல் செய்ததாக குறிப்பிட்ட அண்ணாமலை திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சர்வ சாதாரணமாக நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் சிறைக்குச் செல்ல காத்திருப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்து இருக்கிறார்.