தேசியத் தலைவர்களை ஜாதி தலைவர்களாக மாற்றியதே திமுகதான்!… அண்ணாமலை கடும் தாக்கு!
தேசியத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக மாற்றியது திமுகதான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம். இவைதான் திமுக அரசின் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். தேசியத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக மாற்றியது திமுகதான். தமிழகம் முழுவதும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களின் பல தலைமுறை எதிர்பார்ப்பான நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று பதிவிட்டுள்ளார்.