வாக்காளர்களுக்கு பரிசு...? அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்...!
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முதல் தலைமுறை வாக்காளர்களை அழைத்து நிகழ்ச்சி ஒன்றை பாஜக சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர், அதில் பங்கேற்பவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என அண்ணாமலை வெளியிட்ட விளம்பரத்தை கண்டித்து திமுக வழக்கறிஞர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சி தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, அதற்கும் பாஜகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்த்து தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கட்சியில் தனது இருப்பைக் காட்ட, அவ்வப்போது, திமுக வழக்கறிஞர் சரவணன் இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், இதுவரையில் திமுக அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை பாவம். சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் நிகழ்ச்சிக்கும், தமிழக பாஜகவுக்கோ, அல்லது எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை.
அந்நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சிலர் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியாகத் தெரிகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக சார்பில் யாரும் கலந்து கொள்ளவுமில்லை. எனவே, திமுக வழக்கறிஞர் சரவணன் அவர்கள், எங்கள் மாநிலத் தலைவரை இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புப்படுத்துவது, முற்றிலும் திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.
கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில், மக்களுக்குக் கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றையாவது ஒழுங்காக நிறைவேற்றியிருந்தால், இது போல, மிஸ் மிஸ் என்னைக் கிள்ளிட்டான் என்று புலம்ப நேர்ந்திருக்காது. தமிழகம் முழுவதும், திமுக மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் இருக்கையில், மக்களைச் சந்திக்கப் பயந்து, குறுக்கு வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் திமுகவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.