"தமிழகத்தில் "திமுக-பாஜக" என்ற போட்டி"..! 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி..! விசிக மீது உளவியல் தாக்குதல்…! திருமாவளவன் பளீச்..!
தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிக்க பாஜக முயல்வதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "தமிழகத்தில் 1977ல் இருந்து திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியல், தற்போது வரை இருந்து வருகிறது, இதை மாற்றிய அமைக்க வேண்டும் என்று பாஜக முயல்கிறது. அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்து திமுக-பாஜக என்ற போட்டி அரசியலை உருவாக்க வேண்டும் என்று முனைப்புக்காட்டுகிறது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து சந்திக்க விரும்பாது, விரும்பவில்லை, அதிமுகவுடன் இணைந்து பயணிக்கவே பாஜக விரும்பும். இதற்காகத்தான் பல்வேறு நகர்வுகளை எடுத்து செல்வதை காண முடிகிறது. பா.ஜ. தமிழ்நாட்டில் வேரூன்றி வலுப்பெற்று விட்டால், எதிர்காலத்தில் ஜாதிய சக்திகளும், மதவாத சக்திகளும் கொட்டமடிக்கும் நிலை ஏற்பட்டு விடும். இதை தடுக்க பா.ஜ.கவிற்கு, அதிமுக இடம் கொடுத்து விடக்கூடாது.
விசிக, ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கின்ற சூழ்நிலையில், மாற்று சிந்தனைக்கு இடமில்லை. சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று சொன்னதற்கு பின்பும் கூட கடுமையான விமர்சனங்கள் மூலம் எண்கள் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு யாரும் இரையாகி விடக்கூடாது என்று எச்சரிக்கிறேன்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Read More: இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரன்ட்…! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!