கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது...! கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கருத்து...!
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன்; மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என பல கோணங்களில் ஆய்வு செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசம் வழங்கக்கூடாது என, பாஜக தெரிவித்தது. ஆனால், அதே பாஜக மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போன்று இலவசங்களை அறிவித்துள்ளது. பாஜக தேர்தல் வெற்றிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யும்.
வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டம் மோடி அரசு , மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டும் ஏற்பாடாக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இத்திட்டத்தை எதிர்க்கும் வகையில் நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். குடியுரிமை சட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பாஜக அமல்படுத்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, அத்திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம்.
புதிதாக வந்துள்ள சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கின்றனர். அவர்களுடன் யார் கூட்டணி சேர போகிறார்கள். அப்படி சேர்ந்தாலும் அவர்கள் என்ன வெற்றி பெற போகிறார்களா? வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு வழங்க போகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.