தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு..! மருத்துவமனையில் அனுமதி..!
தேமுதிக கட்சியின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத நடிகராகவும் கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் துவங்கினார். பிறகு 2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளை கைப்பற்றி தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார். பின்னர் 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டிருந்த அவர் அரசியல் நிகழ்வுகளில் பங்குபெறுவதை தவிர்த்தார்.
இந்நிலையில் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.