"தீபாவளி முகூர்த்த வர்த்தகம்"!. ஒரு மணி நேரம் நீடிக்கும் வர்த்தகத்தின் சிறப்புகள்!. நாள், நேரம் இதுதான்!
'Diwali 'Muhurat Trading': தீபாவளியை முன்னிட்டு நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகளான என்எஸ்இ (NSE), பிஎஸ்இ (BSE) மற்றும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) ஆகியவற்றில் முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1, 2024 அன்று நடைபெறும். முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
சுப நேரத்தில் நடைபெறும் இந்த சிறப்பு வர்த்தக அமர்வில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பங்குகள் மற்றும் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 31, நவம்பர் 1 என இரு நாட்களும் தீபாவளி திதி இருப்பதால் பங்குச்சந்தையில் முகூர்த்த வர்த்தகம் எப்போது நடக்கும் என்ற கேள்வி பலருக்கு இருந்தது.
இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகத்தின் சிறப்பு அமர்வு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். "முகூர்த்த வர்த்தகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்படும்." என்று NSE அறிவிப்பு தெரிவிக்கின்றது. MCX -இலும் அனைத்து கமாடிடிகள் மற்றும் இண்டெக்ஸ்களுக்கும் நவம்பர் 1 ஆம் தேதி முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும்.
தேசிய பங்குச் சந்தையான என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கும். பொசிஷன் லிமிட், கொலேட்ரல் வேல்யூ மற்றும் டிரேட் மாடிஃபிகேஷன் ஆகியவற்றுக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 7:10 மணியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குப் பிறகு, புதிய பொசிஷன்களை எடுக்கவோ அல்லது ஏற்கனவே செய்த வர்த்தகத்தில் மாற்றங்களை செய்யவோ முடியாது.
கூடுதலாக, நவம்பர் 1, 2024 அன்று முகூர்த்த வர்த்தகம் நடைபெறுவதால், அக்டோபர் 31, 2024 மற்றும் நவம்பர் 1, 2024 ஆகிய வர்த்தகத் தேதிகளுக்கான பே-இன்/பே-அவுட் பரிவர்த்தனைகள் நவம்பர் 4, 2024 அன்று காலை 8:30 மணிக்கு செட்டில் செய்யப்படும். MCX தனது சிறப்பு வர்த்தக அமர்வையும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடத்தும். இதனுடன், மாலை 5:45 முதல் 5:59 மணி வரை ஒரு முன் அமர்வு (சிறப்பு அமர்வு), அதாவது ப்ரீ செஷன் நடத்தப்படும். எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, மாலை 6:00 மணி முதல் இரவு 7:15 மணி வரை க்ளையண்ட் கோட் மாடிஃபிகேஷன் அமர்வு இருக்கும்.
வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, க்ளையண்ட் கோட் மாடிஃபிகேஷன் அமர்வு என்றால், ஒரு வாடிக்கையாளரின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய வர்த்தக வழிமுறை, ஸ்கிரிப்டுகள் அல்லது தளங்களில் மாற்றங்களைச் செய்வதாகும். முகூர்த்த வர்த்தகத்தின் பாரம்பரியம் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. பிஎஸ்இ அதை முறையாகத் தொடங்கியது. இந்தக் காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் வரவிருக்கும் ஆண்டில் செழிப்பைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் இந்த முகூர்த்த வர்த்தக அமர்வு நடக்கிறது. பிஎஸ்இக்குப் பிறகு, என்எஸ்இ -யும் முகூர்த்த வர்த்தக அமர்வை ஒரு சிறப்பு வர்த்தக அமர்வாக அங்கீகரித்துள்ளது.