இந்திய - சீன எல்லையில் தீபாவளி கோலாகலம்!. இருநாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டாட்டம்!
Indo-China border: கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய பகுதிகளில், இருநாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டதாகவும், தீபாவளி பண்டிகை தினமான இன்று(அக்.,31), எல்லையில் சீன ராணுவத்தினருக்கு நம் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் ஊடுருவ முயன்றது; இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
இந்த நடவடிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “எல்லையில் நீடித்து வந்த பிரச்னைக்கு இரு நாடுகளும் தீர்வு கண்டுள்ளன.''இதன் வாயிலாக, மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி தற்போது கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இருநாட்டு படைகளும் ஏற்கனவே திட்டமிட்டப்படி முறையாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.
இதற்கிடையே, இந்தியா - சீனா இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு படைகளும் விலக்கி கொள்ளும் நடவடிக்கைக்கு, அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. எல்லை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதை கொண்டாடும் விதமாக, தீபாவளி பண்டிகை தினமான இன்று, எல்லையில் சீன ராணுவத்தினருக்கு நம் வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.