இலங்கை பாராளுமன்றம் கலைப்பு!. நவம்பர் 14ல் வாக்கெடுப்பு!. புதிய அதிபர் அனுர குமார திசநாயக அழைப்பு!.
Sri Lanka: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற அனுர குமார திசநாயக, பாராளுமன்றம் கலைபட்டுள்ளதாகவும் இதற்காக நவம்பர் 14ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடதுசாரி தலைவரான அனுரகுமார திசநாயக (60), நேற்று முன்தினம் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக புதிய அரசு ஆட்சி அமைக்கும் வகையில் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரும் பதவி விலகினார்கள். இதனை தொடர்ந்து நேற்று புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அதிபர் அனுர குமார திசநாயக முன்னிலையில் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு நீதி, கல்வி , தொழிலாளர் துறை, தொழில்துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமராக பதவி வகித்த மாவோ பண்டாராநாய்க்க, அவரது மகள் சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்கும் மூன்றாவது பெண் ஹரிணி அமரசூர்யா.
தொடர்ந்து என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுனாராச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தற்போது இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளதாக அதிபர் திசநாயக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும், புதிய தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையின் பாராளுமன்றம் கடைசியாக 2020 ஆகஸ்ட் மாதம் மீண்டும் கூட்டப்பட்டது. ஆகஸ்ட் 2025 வரை இருந்த கால அவகாசம் நள்ளிரவுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.