உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் ஆபத்தான நோய்கள்.? எப்படி சரி செய்யலாம்.!?
பொதுவாக நம் உடலில் உள்ள ரத்தத்தில் யூரிக் அமிலம் குறிப்பிட்ட அளவில் இருக்கும். இந்த அமிலம் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும் வரையில் உடலுக்கு எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் அளவுக்கு அதிகமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் இருந்தால் உடலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் நோய்கள் உருவாகின்றன. இவ்வாறு யூரிக் அமிலம் அதிகமாவதற்கு தவறான உணவு முறையும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள்: கை மற்றும் கால்களில் வீக்கம், நடக்க முடியாமல் சிரமப்படுவது, குதிகாலில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மூட்டுகளில் நடக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுவது, இரத்தத்துடன் கலந்து சிறுநீர் வெளியேறுதல் போன்றவை ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானதற்கு அறிகுறியாக உள்ளது.
யூரிக் அமிலம் அதிகமானால் ஏற்படும் பின் விளைவுகள்: ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானால் சிறுநீரகத்தினால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாமல் நச்சுகள் கல்லாக மாறி சிறுநீரகத்தில் தேங்குகிறது. மேலும் சிறுநீரகம் செயலிழந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது. மூட்டு பகுதிகளில் யூரிக் அமிலம் சேர்ந்து கீல்வாதம் என்ற நோயை ஏற்படுத்துகிறது. குறிப்பாக யூரிக் அமிலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வை ஏற்பட செய்கிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
குறைக்கும் வழிமுறைகள்:அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால் உடல் எடையை குறைப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் பன்றி இறைச்சி போன்ற கொழுப்பு நிறைந்த இறைச்சியை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த பால், சோடா, குளிர் பானங்கள், ஆல்கஹால், போன்றவற்றை கட்டாயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது, குறைந்த கொழுப்பு சத்துடைய பால், தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்வது, பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்பதன் மூலம் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அதிகமாக உடலில் காணப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.