விவசாயிகளுக்கு ஏமாற்றம்!…ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை!… அமைச்சர் தகவல்!
Mettur dam: கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாததால், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் நீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்த நிலை மாறி தற்போது சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு, சேலம், வேலூர், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தருமபுரி என பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவானது. வெயிலின் தாக்கம் இருந்தாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை கொட்டித்தீர்த்து வருகிறது. தமிழகத்தில் கோடைமழையை பொறுத்தவரை இந்த பருவத்தில், இதுவரை 115 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி, குளங்கள், அணைகளில் நீர்மட்டம் குறைந்தன. குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டது. இந்தநிலையில் கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாததால், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் நீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 30 சதவீதத்திற்கு மேலான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்கின்றனர். கொப்பரை விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. கொப்பரை தேங்காயை கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும் என, முதல்வர் பரிந்துரைத்தார். அதை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை, கிலோவுக்கு 8 ரூபாய் உயர்த்தி உள்ளது.வெளி மார்க்கெட்டிலும் தற்போது கொப்பரை தேங்காய் விலை அதிகரித்துள்ளது. தேங்காய் விலை உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளம் வரும் அளவிற்கு, கோடை மழை இல்லை. பயிர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உதவ, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போதுள்ள சூழ்நிலையில், வரும் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. தண்ணீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான விதைகள், இடுபொருட்கள், உரங்கள் இருப்பு உள்ளன.
Readmore: முதுகு வலி பின்னியெடுக்குதா? அப்போ கண்டிப்பா நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!