பில்லா படத்தை ஃப்ளாப் என்று கூறிய இயக்குனர்.. ரஜினியின் மேனேஜர் கொடுத்த தரமான பதிலடி...
1980-ம் ஆண்டு ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீ பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பில்லா. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான டான் படத்தின் ரீமேக்காக தமிழில் பில்லா படம் உருவானது. இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் இது மாறியது. இந்த படத்திற்கு பின்னர் ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து மீண்டும் ரீமேக் செய்தார். இந்த படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஷ்ணுவர்தன் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷை வைத்து நேசிப்பாயா என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷ்ணுவர்தன் ரஜினியின் பில்லா படத்தை தோல்வியடைந்த படம் என்று கூறினார்.
பில்லா படத்தை மீண்டும் ரீமேக் செய்தது என்பது குறித்து பேசிய அவர் “ “உண்மையைச் சொல்லப் போனால், அந்த நேரத்தில் பில்லா நன்றாக ஓடவில்லை. நாம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தேன்? படத்தில் எனக்கு என்ன பிடிக்கும்? அந்த நேரத்தில் அவர்கள் ஒரு டார்க் கேரக்டரை கதாநாயகனாகக் கொண்டிருந்தது எனக்குப் பிடித்திருந்தது, அது ஒரு சிறந்த யோசனை என்று நினைத்தேன். அதனால் அந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்தேன்” என்று கூறினார்.
விஷ்ணுவர்தனின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பில்லா ஒரு பிளாக்பஸ்டர் படம் என்று ரஜினி ரசிகர்கள் பலரும் விஷ்ணுவர்தனுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பு மேலாளர் ரியாஸ் அகமது இதற்கு பதிலளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “அன்புள்ள விஷ்ணுவர்தன் அவர்களே 1980 ஆம் ஆண்டு வெளியான பில்ல படம் வெள்ளி விழா வெற்றி பெற்றது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நீங்கள் இதை அசல் பதிப்பின் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் பாலாஜியிடம் உறுதிப்படுத்தலாம். தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க உங்கள் அறிக்கைகளில் துல்லியத்தை உறுதி செய்யுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் தினத்தன்று வெளியானது. ரஜினி கடைசியாக டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : காதல் கணவருடன் தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..!! திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்..!!