"சிறைக்குச் செல்ல நான் தயார்.. ஆனால்!!" - இயக்குநர் அமீர் ஆவேசம்!
சிறைக்குப்போக நான் தயார் ஆனால், நான் வெறுக்கிற போதைப்பொருள் குற்றத்துக்காக நான் சிறை செல்ல மாட்டேன் என்றும், வழக்கு குறித்து தீவிரமாக விசாரிக்காமல் தீர்ப்பெழுதாதீர்கள் என்றும் இயக்குநர் அமீர் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமீர், ஜாபர் சாதிக்கைத் தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றாலெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறையபேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வுசெய்துகொண்டிருக்க முடியாது.
அப்படியானால், 'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள். ராமாயணத்தில் சீதை அக்னியில் இறங்கி தான் குற்றமற்றவர் என்று ஒரு முறை தான் நிரூபித்தார்... ஆனால் தான் வாராவாரம் நிரூபித்து கொண்டிருக்கிறேன்.
என்னை சந்தேகப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை ஆனால் தீவிரமாக விசாரிக்காமல் நீங்களாக தீர்ப்பு எழுதாதீர்கள் என்று பேசினார். சிறைக்குச் செல்ல நான் தயார் என்று கூறிய அமீர், ஆனால் நான் வெறுக்கும் போதைப் பழக்கத்தில் தொடர்புடைய வழக்குக்காக சிறைக்குச் செல்ல மாட்டேன் என்றும், போதை சமூகத்தை சீரழிக்கிறது என்றும் பேசினார். டெல்லியில் தன்னிடம் என்.சி.பி விசாரணை நடத்தியதை பற்றியும் அமீர் பேசினார்.
டெல்லியில் என்னிடம் என்.சி.பி அதிகாரிகள் கண்ணியமாக விசாரித்தனர். சில கடினமான கேள்விகளை கேட்டது மனதை காயப்படுத்தியது. ஆனால் அது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் யுக்தி என்பது எனக்கும் தெரியும் என்று பேசினார். என்னிடம் நேர்மையும் உண்மையும் உள்ளது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிய அவர், என் நண்பர்களும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்தப் பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள். இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறதுஎன்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.