திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 'வளர்த்த மாடே எமனாக மாறிய சோகம்'.. இளைஞருக்கு நேர்ந்த கொடூர முடிவு.!
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் பண்டிகை மட்டுமல்லாது கோவில் திருவிழாக்கள் மற்றும் தேவாலய திருவிழாக்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்திருக்கிறது. இந்த தேவாலய திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டன. இந்த திருவிழாவில் மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகளும் 500 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஆர்டிஓ அதிகாரி ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக செபஸ்டின்(27) என்பவர் தனது காலையுடன் வந்திருந்தார்.
வாகனத்தில் கொண்டுவரப்பட்ட காளையை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கீழே இறக்கும்போது மிரண்டு போன மாடு செபாஸ்டின் கழுத்தில் கொம்பால் குத்தி இருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் செபாஸ்டின். எதிர்பாராத விதமாக வளர்த்த மாடு முட்டியதில் இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது .
மாடு முட்டியதில் மரணம்டைந்த செபாஸ்டினுக்கு திருமணமாகி விக்டோரியா என்ற மனைவி இருக்கிறார். அவர் செவிலியர் ஆக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு தான் ஆகியிருக்கிறது. இந்நிலையில் வளர்த்த மாடு எதிர்பாராத விதமாக முட்டியதில் பரிதாபமாக பலியாகி இருக்கிறார் செபாஸ்டின். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உட்பட 31 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.