தோண்ட தோண்ட வரும் சடலங்கள்!. பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!. நிலச்சரிவால் சோகம்!
Landslide: தெற்கு எத்தியோப்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.
எத்தியோப்பியாவின் Gofa மண்டலத்தின் Geze-Gofa மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அப்பகுதியில் வசித்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வெளியே வருவதால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்தவகையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 148 ஆண்களும், 81 பெண்கள் என மொத்தம் 229 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்ளூர் தகவல் தொடர்பு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் சேற்றில் இருந்து இதுவரை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மில்லியன் மக்களைக் கொண்ட ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியா, வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட காலநிலை பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது
இதுகுறித்து எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் தனது எக்ஸ் பதிவில், "இந்த பயங்கரமான பேரிழப்பால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். "விபத்தை தொடர்ந்து, மத்திய பேரிடர் தடுப்பு பணிக்குழுவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பேரிடர் பாதிப்பை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்." இதேபோல், எத்தியோப்பியாவைச் சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் X பதிவில், நிலச்சரிவில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடி சுகாதாரத் தேவைகளுக்கு ஆதரவாக WHO குழு நிறுத்தப்படுவதாகக் கூறினார்.