”பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”..? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு..!!
தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சமீப காலமாக அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒருமித்த கருத்தை மேடையில் பிரதிபலித்து சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார் ஆதவ் அர்ஜுனா. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று தனது எக்ஸ் தளத்தில், தனது One Mind India மற்றும் Voice Of Commons தேர்தல் வியூக நிறுவனங்கள் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததாகவும், விசிகவின் 2 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கவிதை தொகுப்பில் இருந்து ஒரு சில வரிகளை பகிர்ந்துள்ளார்.
அதில், ”இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று முழங்கியவர். பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார். வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர்.
நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம். தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என பதிவிட்டுள்ளார்.