விளைநிலங்களில் கிடைக்கும் வைரக்கல்? - கிராமத்துக்கு படையெடுக்கும் மக்கள்! இந்த அதிசய கிராமம் எங்க இருக்கு?
ஆந்திராவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கிராம மக்கள் வைரக் கற்களை தேடி விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து வைரக்கற்களை தேடுவது வழக்கம்.
தற்போது, கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா பகுதியில், பெருவழி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு தனது நிலத்தில் வைர கல் கிடைத்ததாகவும், அதனை ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்க ஆபரணத்தை பெற்றுக்கொண்டு இடைத்தரகருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பரவியதால், கிராம மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு, குடும்பத்தினருடன் ஊரில் உள்ள நிலங்கள் மற்றும் காடுகளில் வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு வைர கல் தங்களின் வாழ்க்கையை மாற்றும் என நம்பி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிலத்தை அங்குலம் அங்குலமாக தோண்டி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தோன்றும் கற்கள் அனைத்தையும் எடுத்து, வைரமாகத் தான் இருக்கும் எனும் நம்பிக்கையில் தங்கள் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர். வைரக்கல் தேடுதல் வேட்டைக்கு விஜயநகரப் பேரரசு தொடங்கி பல்வேறு கதைகளை கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தொல்லியல் துறை இதுவரை உறுதிசெய்யவில்லை.