புத்தக திருவிழாவில் பக்தி பாடல்.. திடீரென சாமி ஆடிய அரசு பள்ளி மாணவிகள்..!! - விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம்
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவிகள் மத்தியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசுப் புத்தக திருவிழாவில் சாமி பாடல் ஒலிபரப்பச் செய்து மாணவிகள் சாமி ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா தமுக்க மைதானத்தில் தொடங்கியது. நேற்று (செப்.6) தொடங்கி 16ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி ஒன்பது மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புத்தகத் திருவிழாவினை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் தினம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் பிரபல எழுத்தாளர்களின் பேச்சு, பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது,
அப்போது பக்தி பாடல்கள் சிலவற்றை ஒலிபரப்பிய நிலையில் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த சில பள்ளி மாணவிகள் திடீரென சாமி ஆடத் தொடங்கினர். 100க்கும் மேற்பட்ட மாணவிகள் அமர்ந்த நிலையில் அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் சாமி வந்து ஆடத் தொடங்கினர். இதை அடுத்து அங்கிருந்த சக மாணவிகள் அவர்களை பிடித்து இழுத்து அமர வைத்தனர்.
அதில் சிலர் மயங்கி விழுந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புத்தகத் திருவிழாவில், பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது தொடர்பாக அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "நாட்டுப்புற பாடலான கருப்பசாமி பாடல் நாட்டுப்புற கலைஞர்களால் பாடப்பட்டது. பாடலுக்கு உணர்ச்சி வசப்பட்டு சில மாணவிகள் ஆடினர். சிலர் நடனமாடினர். பாடல் ஒலி பாடல் ஒலிபரப்பப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. நிகழ்ச்சி முறையாகவே நடத்தப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; மனைவி பெயரில் வீடு வாங்கினால் இத்தனை சலுகைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..