தமிழ்நாட்டின் வளர்ச்சி..!! மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சம்..!! அண்ணாமலை சொன்ன குட் நியூஸ்..!!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் வரும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையையும் அண்ணாமலை வெளியிட்டு பேசினார்.
பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில், சிறு குறு நிறுவனங்கள் மின்சார கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டு பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.
குறிப்பாக, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். வரும் பட்ஜெட்டில் கோவை ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆகும்போது திமுகவின் நிலைமையை மக்களே அறிந்து கொள்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து திருச்சியில் நடந்த மாநாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.