ஆந்திராவிலும் வெளுத்து வாங்கும் கனமழை!. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Andhra: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திராவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களான ராயலசீமா, நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். தொடர் மழையால் திருமலையில் சுவாமியை தரிசிக்க செல்லவும், தங்கும் அறைகளுக்கு திரும்பவும் போதிய வாகன வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிபட்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக ஆந்திராவில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பெய்தது. நெல்லுார் மாவட்டத்தின் கவாலி பகுதியில், 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக பபாட்லாவின் அட்டாங்கியில் - 14; நெல்லுாரின் கந்துகூரில் - 12; ஏனாமில் -9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நெல்லுார் மாவட்டத்தின் ஆத்மகூரில், 8 செ.மீ., மழை உட்பட ஆந்திராவின் கடலோர பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்கரையோரங்களில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Readmore: கனமழை எதிரொலி!. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் ரத்து!. உதவி எண்கள் அறிவிப்பு!.