தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்..!!
சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஏடிஸ் என்ற கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் கடித்து 5 அல்லது 10 நாட்களுக்குப் பிறகு தான் டெங்கு பாதிப்பு குறித்த அறிகுறிகள் தெரியும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், எலும்பு வலி, அசௌகரியம், தசைவலி, உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களைக் கடிக்கும் என்பதால், காலை நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இந்த கொசுக்கள் கை முட்டி மற்றும் கால் முட்டி ஆகிய பகுதிகளில் தான் அதிகளவில் கடிக்குமாம். மற்ற கொசுக்களைப் போன்றில்லாமல் டெங்கு கொசுவை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விட முடியும். உருவத்தில் பெரியதாகவும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான கோடுகள் அதிகளவில் இருக்கும். மேலும், தண்ணீர் தேங்கும் இடத்தில் கொசுக்களின் முட்டைகள் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் தான், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு பரவலை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், உயிரிழப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறினார். மேலும் கடலூர், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எலிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.