நாடு முழுவதும் 32,091 நபர்களுக்கு டெங்கு... 32 மரணம்..! மாநில அரசுக்கு பறந்த உத்தரவு...!
நாடு முழுவதும் 32,091 நபர்களுக்கு டெங்கு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கட்டிடத்தில்; டெங்கு பாதிப்புகள் பொதுவாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சக்கட்டத்தை அடையும். எனவே, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்கள், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நடப்பு பருவமழைக்கான டெங்கு பரவல், அதற்கான தயார் நிலை, தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை வழங்குதல் குறித்து சுகாதார அமைச்சகம், சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் NCVBDC (National Vector Borne Disease Control Programme) ஆகியவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.
நாடு முழுவதும் 32 ஆயிரத்து 91 நபர்களுக்கு டெங்கு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். இதனால், டெங்கு பரவலின் மையப்பகுதியாக உள்ள இடங்களைக் கண்டறிந்து, அங்கு கண்காணிப்பை அதிகரித்து, டிஜிட்டல் வரைபடம் மூலம் பாதிப்புகளைக் குறிப்பிட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தேசிய நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு மையத்தின் (NCVBDC) பட்டியலின்படி, 2023ஆம் ஆண்டு ஜூன் வரையில் நாடு முழுவதும் மொத்தம் 18 ஆயிரத்து 391 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது 32 ஆயிரத்து 91 நபர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் காரணமாக நாடு முழுவதும் இதுவரையில் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2 பேர் மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.டெங்குவின் பாதிப்பு குறித்து இந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி வரையில் குறைந்தது ஏழு மறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) பிரதிநிதிகளும், செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். டெங்கு பாதிப்புகள் பொதுவாக அக்டோபரில் உச்சமாக இருந்தாலும், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தற்போது டெங்கு பாதிப்புகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.