திணறும் டெல்லி.. உச்சத்தை தொட்ட காற்று மாசு.. 9 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் கிளாஸ்..!! பள்ளியில் மாஸ்க் அணிவது கட்டாயம்
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து டெல்லி முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் ஆன்லைன் பயன்முறைக்கு மாறியுள்ள நிலையில், ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டெல்லியில் இருக்கும் முக்கியமான பிரச்சினை காற்று மாசுபாடு. அண்டை மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருக்கும் குப்பைகளை எரிக்கும் போது வெளிவரும் புகை தலைநகர் டெல்லியை சூழ்ந்து கொள்கிறது. இது காற்றின் தரத்தை மிகவும் மோசமாக்குகிறது. பலருக்கும் சுவாசப் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளும், மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தற்போது டெல்லியின் காற்று தரக் குறியீடு 457 என்ற மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த குறியீட்டில் 1 முதல் 200 வரை ஓரளவு சமாளிக்க முடியும். அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தான நிலை தான் என்கின்றனர். இந்த காற்றை சுவாசிப்போருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக நேற்றைய தினம் நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று தரக் குறியீடு மிக மோசமாக காணப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திங்கள் கிழமை முதல் GRAP-4 விதிக்கப்பட்டதன் மூலம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்படும். மேலும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்" என்று X இல் பதிவிட்டுள்ளார்.
மேலும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது எல்என்ஜி, சிஎன்ஜி, பிஎஸ்-6 டீசல் அல்லது மின்சாரம் போன்ற சுத்தமான எரிபொருளில் இயங்கும் டிரக்குகளைத் தவிர, டெல்லிக்குள் டிரக்குகள் நுழைவதை இந்த உத்தரவு தடை செய்கிறது. டெல்லிக்கு வெளியே இருந்து வரும் அத்தியாவசியமற்ற இலகுரக வணிக வாகனங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன, EVகள், CNG மற்றும் BS-VI டீசல் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.