சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா' - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து நிபுணர்களின் கருத்து என்ன?
இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1983 ஆகியவற்றை ரத்து செய்து, 2023 டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா – 2023 (இந்திய நியாயச் சட்டம்) மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டது. சட்டத்துறையில் காலனித்துவ தடயங்களை அகற்றுவதற்கும், இந்திய மதிப்புகள் மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்பவும் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து நிபுணர்களின் கருத்து
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று நடைமுறைக்கு வருவதால், வல்லுநர்கள் தங்கள் எதிர்வினைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து கொட்டுகிறார்கள். இதுகுறித்து சிறப்பு குற்ற பிரிவு போலிசார், சாயா ஷர்மா கூறுகையில், "பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த பிரிவுகளின் கீழ் இன்று முதல் எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்படும். இதற்கான பயிற்சி பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கியது. நாங்கள் சிறு புத்தகங்களை தயார் செய்தோம். வரவிருக்கும் மாற்றத்திற்குத் தயாராகும் வகையில் காவலர்களை எளிதாகப் பயிற்றுவித்தோம். சிறந்த அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் 'தண்டனை'யிலிருந்து 'நீதி'க்கு நாம் செல்கிறோம் என்பதுதான். டிஜிட்டல் ஆதாரத்திற்கு இப்போது, ஆதாரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். தடயவியல் நிபுணர்களின் பங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார், புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். அவர், "சட்டங்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவது ஜனநாயகத்தில் விரும்பத்தக்கது அல்ல. இது குறித்து நாடாளுமன்றக் குழுக்களில் போதிய விவாதம் நடத்தப்படவில்லை. இந்த மசோதாக்கள் அவையில், குற்றவியல் சட்டங்களின் சட்ட கட்டமைப்பில் இந்த மாற்றத்தை அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையே அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன, அது செய்யப்படவில்லை " எனக் கூறினார்.
முன்னாள் கூடுதல் ஏஎஸ்ஜி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் கூறுகையில், "இந்த மூன்று புதிய சட்டங்கள் இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். பழைய சட்டங்கள் வெவ்வேறு கோணங்களில் உருவாக்கப்பட்டன ஆனால் தற்போதைய சூழ்நிலை வேறு ஒன்றைக் கோருகிறது. இன்று மின்னணு ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த புதிய சட்டங்கள் அதனை சமன் செய்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் நிதிக் குற்றங்கள் உட்பட, ஒரு முக்கியமான படியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்ஐஆர் மற்றும் ஜீரோ எஃப்ஐஆர் பற்றித் தெரிவிக்கப்படும்“ என்றார்.