IPL 2024 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் டெல்லி கேப்பிடல்ஸ் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அரங்கேற உள்ளது. அதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து, இரண்டாவது போட்டி இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் முக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் அந்த அணி எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. வழக்கமாக ஓர் அணி20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். ஆனால் அந்த ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீசுவதற்கு 117.82 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. நடப்பு சீசனில் டெல்லி அணி மீது இதுபோன்ற குற்றச்சாட்டு எழுவது இது 3-வது முறையாகும். இதனால் ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளின் படி கேப்டனுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் மீதான தடையை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் பிசிசிஐ குறைதீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்த பிசிசிஐ குறைதீர்ப்பாளர், போட்டி நடுவரின் முடிவே இறுதியானது, அதற்கு கட்டுப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த விசாரணையில் ரிஷப் பந்த், டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தலைமை செயல் அதிகாரி சுனில் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். மேல்முறையீட்டில், பந்து வீசுவதற்கு தாமதமானதற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி பல காரணங்களை மேற்கோள் காட்டியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்கள் போட்டியின் போது 13 சிக்ஸர்களை அடித்தனர் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதுதொடர்பான முடிவை எடுப்பதற்கு கூடுதல் நேரம் விரயமானது போன்ற காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்தநிகழ்வுகளுக்கு கூடுதலாக எவ்வளவு நேரம் செலவழிக்கப்பட்டது என்பதை விளக்கும் புள்ளிவிவர தகவல்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இந்த கோரிக்கையை குறைதீர்ப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பந்த் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார். இதனால் அக்சர் படேல் அணியை வழிநடத்தக்கூடும். விக்கெட் கீப்பர் பணியை அபிஷேக் போரல் அல்லது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மேற்கொள்ளக்கூடும். முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் இல்லாதது அந்த அணியின் செயல் திறனை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.