IPL 2024: டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த வேக பந்து வீச்சாளர்!
ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் டெல்லி அணி ஆடி வந்தது.
இந்நிலையில் தற்போது ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரரை டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி புரூக்கிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லிசாட் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்.
லிசாட் இதுவரை 2 டெஸ்ட், 4 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரை ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான போட்டியில், டெல்லி கேபிடல்ஸ், 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின்னர் இந்த மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.