வங்கியில் சேவை குறைபாடு.. ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நான், கடந்த 2000-ம் ஆண்டு முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறேன். கிரெடிட் கார்டு மூலம் மேற்கொண்ட செலவு மற்றும் பணம் செலுத்திய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினேன்.
இந்த தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் தெரிவித்தது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி கணக்கு விவரங்களை கோரினால் வழங்க வேண்டும். கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வங்கி நிர்வாகம் வழங்காததால் அந்நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் தேவராஜன் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் வி.ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் தேவராஜன் வங்கியிடம் விவரங்களை கோர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்தாலும், சேவை வழங்குனர் என்ற அடிப்படையில் இந்த தகவல்களை வழங்குவது வங்கியின் கடமையாகும்.
எனவே, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். மனுதாரர் கோரும் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்கு வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Read more ; நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட புதிய BSNL 4 ஜி தளங்கள் இணைப்பு…! மத்திய அரசு தகவல்