பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு..!! நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி..!!
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ராகுல் காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கர்நாடகாவில் கடந்த 2019 - 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. பல்வேறு வகைகளில் கமிஷன் பெறப்படுகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
குறிப்பாக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி, அமைச்சர் பதவிக்கு ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், எம்எல்சியுமான கேசவ பிரசாத் சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட இன்னும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். ஆனால், ராகுல் காந்திக்கு இன்னும் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்கில் தொடர்பாக ஜூன் 1ஆம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை. மேலும், காலஅவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜூன் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
Read More : தினசரி சர்க்கரையை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்..? அளவுக்கு மீறினால் என்ன நடக்கும்..?