டீப்ஃபேக் வீடியோ விவகாரம்!… குற்றவாளி கைது!... காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா!
டீப்ஃபேக் வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது. இதையடுத்து டெல்லி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு 4 பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 19 வயது இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வீடியோவை அந்த இளைஞர் முதலில் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பரவலாக பகிர்ந்துள்ளார். அவரது கணக்கில் இருந்து சமூக ஊடகங்களில் வீடியோ முதலில் பதிவேற்றப்பட்டதால் விசாரணையில் சேர இளைஞருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து நவ.10ம் தேதி இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரை கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 66 சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்தநிலையில் தான் சம்பந்தப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா, பொறுப்பானவர்களை கைது செய்ததற்கு நன்றி. அதாவது, கைது நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை அன்போடும், ஆதரவோடும், பாதுகாப்போடும் அரவணைத்துச் செல்லும் சமூகத்துக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன். பெண்கள் மற்றும் சிறுவர்களின் அனுமதியின்றி அவர்களின் படம் பயன்படுத்தப்படுவது அல்லது மார்பிங் செய்யப்படுவது தவறு! காவல்துறையின் இந்த நடவடிக்கை உங்களை ஆதரிக்கும் நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருப்பதை நினைவூட்டுவதாக நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.