மாஸ் காட்டும் பத்திரப்பதிவுத்துறை..!! மக்களே அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுகள் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் இதுவரை 11,733 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும், முற்றிலும் ஆன்லைன்மயமாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கை நிர்ணயித்து, பதிவுத்துறை பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதேபோல, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு நடுவில், 20 பிரிவுகளுக்கான கட்டணம் கடந்த 2001 முதல் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதம் இந்த கட்டணத்தை பத்திரப்பதிவு துறை உயர்த்தியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு பணிகள் குறித்த சீராய்வு கூட்டம், சென்னையில் நேற்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ”தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் இறுதி வரையிலான 7 மாதங்களில், பத்திரப்பதிவுகள் மூலம் 11,733 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது 1,222 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகியுள்ளது.
முகூர்த்த நாள் என்பதால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்ய கூடுதல், டோக்கன்கள் வழங்கப்படும். வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில், 150 டோக்கன்களும் மற்றும் 200 வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும். பதிவு முடிந்த பத்திரங்களை, உடனடியாக மக்களுக்கு திருப்பித்தர வேண்டும்" என்று தெரிவித்தார்.