தலைவர்களுக்கு எமனாக மாறிய டிசம்பர் மாதம்..!! பெரியார் To விஜயகாந்த் வரை..!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும், சுனாமி போன்ற சோக நிகழ்வுகளும் டிசம்பர் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி 1972ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25ஆம் நாளில் மறைந்தார். திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வி. ராமசாமி, 1973ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி காலமானார். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திடீரென காலமானார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமானார். டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார்.
இதே போல் பல பிரபலங்களின் மரண செய்தி மற்றும் பேரழிவுகள், கடந்த டிசம்பர் மாதங்களில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா உள்பட பல தெற்காசிய நாடுகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சுனாமி பேரலை தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பையும், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 2005 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சென்னை, திருச்சி, நாகை போன்ற பல மாவட்டங்களிலும் பலர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னையில் ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உதவியை பெற கூட்டத்தினரின் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் போன்ற பல தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.
இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் சூறையாடியது. எத்தனையோ உயிர்கள் பலியானது. லட்சக்கணக்கானோர் உடமைகள் சேதமடைந்தனர். இந்த சோகம் மறைவதற்கு உள்ளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவினால் இன்று அவர் மரணமடைந்துள்ளார். பல தலைவர்களின் உயிரை காவு கொண்ட கறுப்பு மாதமாக உள்ளது டிசம்பர் மாதம்.