பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு..!! இத்தனை மரணங்களுக்கு காரணமான மெத்தனால் எங்கிருந்து வந்தது..?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 51 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி-யிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய மரணத்தில் தொடர்புடையதாக மரக்காணத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து இவர்களிடம் தனி இடத்தில் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முன்னதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மெத்தனால் அதிகமாக கலந்திருப்பது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மேற்கண்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், உயிரிழப்புக்கு காரணமான இந்த மெத்தனால் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினர். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்ட மெத்தனால் அங்கிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலைப் பகுதியில் காய்ச்சப்பட்டது மூலிகை சாராயம் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் போதை அதிகரிப்பதற்காக மெத்தனால் கலந்து சாராயம் காய்ச்சி விற்கப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான மெத்தனால் கலப்பு தான் இத்தனை உயிரிழப்புக்கு காரணம். இல்லையென்றால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : வட்டியை கொட்டிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! மாத வருமானம் இவ்வளவு கிடைக்குமா..?