சற்றுமுன்..! வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு...!
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 344 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் நடைபெறுகிறது. மீட்பு பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றி வருகின்றன. தன்னார்வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது.நேற்று முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மீட்பு பணி நடந்தது. இதில் பலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.