"15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம்"..!! விஷம் கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!
கேரள மாநிலம் பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். ஆனால், இதற்கிடையே, கிரீஷ்மாவுக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரீஷ்மா கஷாயம் கொடுத்ததைத் தொடர்ந்து ஷாரோன் ராஜ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிக்சிசை பலனின்றி காதலன் உயிரிழந்தார்.
காதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால்தான் காதலன் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர் பார்த்த ராணுவ வீரரைத் திருமணம் செய்வதற்காகக் காதலனுக்கு பூச்சி மருந்து கலந்துகொடுத்து காதலியே கொலை செய்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். காதலன் ஷாரோன் ராஜைக் கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்துவும், கிரீஷ்மாவுக்குப் பூச்சி மருந்து கொடுத்ததாக அவரது தாய் மாமா நிர்மல்குமாரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா உள்ளிட்ட அனைவரும் பிணை பெற்று வெளியே உள்ளனர். காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். "ஷாரோன் ராஜிக்குக் கொடுக்கப்பட்ட விஷம் 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம். அந்த விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருந்து இல்லை” என தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜிக்கு விஷம் கொடுப்பதற்கு முன்பு காலையில் 7.30 மணிக்கு அந்த விஷம் உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படும் என கிரீஷ்மா இணையதளத்தில் தேடியதாக டிஜிட்டல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விஷத்தின் தன்மையைத் தெரிந்துகொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணியளவில் காதலன் ஷாரோன் ராஜிக்கு அதைக் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.