தீபாவளி மறுநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு… நவ.18 வேலை நாள்…!
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் தீபாவளி மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு அனைவரின் கோரிக்கையும் ஏற்று தீபாவளி மறுநாளான திங்கட்கிழமை, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக ராசு வெளியிட்ட அறிவிப்பில், "இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.