டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு!… கனவு காண பயப்படவேண்டாம் என உருக்கமான பதிவு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸி., அணிக்காக அறிமுகமானார் வார்னர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். 36 வயதாகும் டேவிட் வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். வார்னர் 110 டெஸ்டில் 25 சதங்கள் மற்றும் 36, 50கள் உட்பட 44.43 சராசரியில் 8,487 ரன்களை எடுத்துள்ளார், ஆனால் டெஸ்ட் அரங்கில் அவரது சமீபத்திய ஆட்டங்கள் விரும்பத்தக்கதாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸை வழிநடத்தினார். ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
தனது சொந்த ஊரான சிட்னியில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும் அதன்படி வரும் ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கனவு காண பயப்படவேண்டாம். அர்ப்பணிப்பு, விடாமுயற்சியால் உங்கள் கனவை யதார்த்தமாக்குங்கள், கவனமாக நேர்மையுடன் இருங்கள், உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தாதீர்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.